திருக்கோவிலூரில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்

திருக்கோவிலூரில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-25 18:45 GMT

திருக்கோவிலூர், 

ஆண்டுதோறும் ஜூன் 26-ந்தேதி போதை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, போதைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருக்கோவிலூரில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என்று அனைவரும் பங்குபெறும் வகையில் வயது வரம்பானது 13 வயது முதல் 60 வயது வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்...

அதன்படி, காலை 7 மணிக்கு திருக்கோவிலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்து போட்டி தொடங்கியது. இதில் பங்கேற்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்திருந்தனர். போட்டியை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு மோகன்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

5 முனை சந்திப்பு, கிழக்கு தெரு, தெற்கு வீதி வழியாக ஆசனூர் சாலையில் உள்ள திருக்கோவிலூர் கல்லூரி வளாகத்தை போட்டியாளர்கள் வந்தடைந்தனர். போட்டியின் முடிவில் ஆண்கள், பெண்கள் என முதல் 3 இடம் பிடித்த இரு பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கும் தலா 5000, 3000, 2000 என பரிசுகளையும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வழங்கி பேசினார்.

உடல் ஆரோக்கியம்

அப்போது அவர் பேசுகையில், போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள், போதைப் பொருட்களின் தீமைகளை உணர்ந்து அதில் இருந்து வெளியே வர வேண்டும். போதை பழக்கம் உள்ள ஒரு மாணவனால் கண்டிப்பாக கல்வியில் உயர்ந்த இடத்தை அடைய முடியாது. தேவையற்ற சிந்தனைகள் தோன்றி எதிர்காலம் அபாயகரமாக முடியும்.

சமூக வலைதளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் ஆரோக்கியத்திற்கு கொடுத்து, அதன்மூலம் நீங்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களாக வாழமுடியும். ஆரோக்கிய சிந்தனை வந்துவிட்டால் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள். போதைப்பழக்கத்திலிருந்து மற்றவர்களை மீட்கவும் நாம் பாடுபடவேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியாகும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

உறுதிமொழியேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 100 சதவீதம் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற காவல்துறை அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறது என்றார்.

முன்னதாக போதை பொருட்கள் ஒழிப்பதில் காவல்துறையுடன் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், நகராட்சி ஆணையாளர் கீதா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வக்கீல் எம்.தங்கம், நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி, நகர அவைத்தலைவர் டி.குணா, கவுன்சிலர் ஜல்லி.பிரகாஷ், அரகண்டநல்லூர் லட்சுமிவித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி செயலாளர் ராஜாசுப்பிரமணியம், ஸ்ரீவித்யாமந்திர் மேல்நிலை பள்ளி தாளாளர் சுனில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எஸ்.எஸ்.வாசன், எம்.செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

,நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் குழுவினர்கள் செய்திருந்தனர். முடிவில் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியின் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்