அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
தமிழகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் சிக்கியது.;
திருவாரூர்,
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அங்குள்ள அனைத்து அறைகளையும் முழுமையாக சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணம் குறித்து கோட்ட என்ஜினீயர் இளம்வழுதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில்...
நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் மற்றும் உதவி கோட்ட என்ஜினீயர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் சிக்கியது.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 290-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில், கணக்கில் வராத ரூ.1¼ லட்சமும், தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 27 அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.1.12 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.14 ஆயிரமும், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.