காணையில்கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய தேர் பவனி

காணையில் கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

Update: 2023-06-14 18:45 GMT

விழுப்புரம் அருகே காணையில் புகழ்பெற்ற கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி, ஆலய கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிகழ்ச்சியை நடத்தினார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை திருப்பலி, நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியும், மாலையில் நவநாள் ஜெபம், தேர் பவனியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் இரவு 8 மணியளவில் புனித அந்தோணியாரின் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

இதையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித அந்தோணியார் சொரூபம் அமர்த்தப்பட்டு அந்த தேர், காணை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்தது. அதன் பிறகு ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று திருப்பலி, கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பெருவிழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்