அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி தேவை; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி தேவை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

Update: 2023-04-16 23:55 GMT

சென்னை,

செயற்குழு கூட்டத்தில் முத்தான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எல்லா சாலைகளுமே ரோம் நாட்டை நோக்கி என்று சொல்வார்கள். அதுபோல வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்திய துணை கண்டத்திலேயே இதுவரை எந்த கட்சியும் இப்படி ஒரு எழுச்சி மாநாட்டை நடத்தியது இல்லை என்று சொல்லும் வகையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.

கட்சி இப்போது வலிமையாக இருக்கும் சூழலில், அதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடந்தது. அந்தவகையில் இந்த செயற்குழு நிறைவாக முடிவடைந்துள்ளது. கர்நாடகா பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவு செய்வார்.

அ.தி.மு.க. பற்றி பா.ஜ.க. வின் நிழல் அண்ணாமலை ஒரு கருத்து சொன்னார். நாங்களும் சொன்னோம். 'அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி தேவை. அது இல்லாதோரின் கருத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை', என்று எடப்பாடி பழனிசாமி அழகாக கருத்து கூறினார். அரசியலில் என் சர்வீஸ் 50 வருடம். ஆனால் அரசியலில் வெறும் 2 வருடம் சர்வீஸ் தான் அண்ணாமலைக்கு, அதாவது அரசியலில் அவர் கத்துக்குட்டி. எனவே எடப்பாடி பழனிசாமியின் கருத்து தான், எங்களின் கருத்தும்.

வளர்த்த கடா மார்பில் பாயலாமா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கிறது. இது கூட்டணி. அதேவேளை அக்கட்சி யின் மாநிலத்தலைவர் என்ற முறையில் அவர் எதை வேண்டுமானாலும் பேசலாமா? நீங்க பாய நினைத்தால் தி.மு.க. மீது போய் பாயுங்கள். நமது பிரதான எதிரி யார், தி.மு.க. தானே... ஊழல் கட்சியான தி.மு.க.வை தோலுரியுங்கள், எங்களை போல.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்தும், மனிதர்களை கடித்தது போல கடைசியில் எங்கள் மீது ஏன் பாய வருகிறீர்கள்? வளர்த்த கடா மார்பில் பாயக்கூடாது. அது கடாவாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி நாங்கள் ஒத்துக்கொள்ள முடியாது.

அண்ணாமலைக்கு நாங்கள் பயந்துவிட்டதாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார். கருணாநிதி காலத்திலேயே அவ்வளவு அடக்குமுறைகளை, வழக்குகளை, பிரச்சினைகளை தாண்டி அ.தி. மு.க. ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. எனவே நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும்? அ.தி.மு.க. தொண்டன் எந்த காலத்திலும் எதற்கும் பயப்பட மாட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் மாநாடு ஏன்?

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து பலத்தை காட்டத்தான் மதுரையில் மாநாடு நடத்துகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்துகிறார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் மாநாடு நடக்கும்போது, தமிழகத்தை மீட்டெடுக்கும் நிலை நிச்சயம் உருவாகும். தமிழகத்தின் மைய பகுதி, தென்மாவட்டங்களில் முக்கியமான இடம் என்பதால் மதுரையை தேர்வு செய்திருக்கிறோம். மற்றபடி, சிலருக்காக இந்த கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்