சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமி
ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவன் காலடியில் படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம்.
அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று மாலை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்னம் மற்றும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தான்தோன்றீஸ்வரர்
மேலும் திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில், நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதர் கோவில் மற்றும் உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், பாலக்கரையில் உள்ள வெளிகண்டநாதர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்புரீஸ்வரர் கோவில், லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று மாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 40 படி அரிசியால் சாதம் சமைத்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேரலிங்கத்திற்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் திருவானைக்காவல் வடக்குதெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தெப்பகுளம் அருகில் உள்ள கரியமாலிஷ்வரர், அம்மாமண்டபம் காசிவிஸ்வநாதர் கோவிலில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
துறையூர்- தா.பேட்டை
துறையூரில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில் சிவபெருமான், துறையூரை அடுத்த நல்லியம்பாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தா.பேட்டை காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மூலவர் சிவலிங்கத்திற்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் காருகுடி கைலாசநாதர், மங்கலம் மங்கை பாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு சிவலிங்கத் திருமேனிக்கு அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சமயபுரம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவில்களான போஜீஸ்வரர் கோவிலில் ஈஸ்வரனுக்கு அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தை சாற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் முக்தீஸ்வரர்கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவில், அழிஞ்சிக்கரையில் உள்ள மேட்றலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தாயுமான சுவாமி
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தாயுமான சுவாமிக்கு மடபள்ளியில் சுமார் 250 கிலோவில் அரிசியில் சாதம் தயாரித்து அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாயுமானவரை அன்ன அலங்காரத்தில் தரிசனம் செய்தனர். இரவில் சிவன் சிரசில் (மேனியில்) அலங்காரமாக வைக்கப்பட்ட சாதத்தை தனியாக ஒரு கூடையில் வைத்து காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. அன்ன அலங்காரம் செய்யப்பட்ட சாதத்தை தவிர மற்ற சாதம் தயிர்சாதமாக செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
முசிறி
முசிறி சந்திரமவுலீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பக்தர்களுக்கு அந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அன்னத்தை வாங்கி சாப்பிட்டனர். இதேபோன்று திருச்சி ரோட்டில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்த ரெட்டியாப்பட்டி மரகதவல்லி தாயார் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, சந்திரனின் ஒளி மூலவர் மீது பட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.