வனப்பகுதிகளில் பாட்டில்களை வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுகிறது மாவட்ட வன அதிகாரி இளையராஜா தகவல்

வனப்பகுதிகளில் கண்ணாடி பாட்டில்களை வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறினார்.

Update: 2023-06-25 18:45 GMT

நாகர்கோவில்,

வனப்பகுதிகளில் கண்ணாடி பாட்டில்களை வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறினார்.

கண்ணாடி பாட்டில்கள்

குமரி மாவட்டத்தில் வனத்தை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வனத்தில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உலக்கை அருவி செல்லும் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. காடுகளில் இத்தகைய கழிவுகள் இருப்பது சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தன்னாா்வலர்கள்

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வனத்துறையானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தூய்மைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 20 தன்னார்வலர்கள் மூலம் இயற்கையான வாழ்விடத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனத்துறை மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் உலக்கை அருவியில் இருந்து 1 டன் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

விலங்குகளுக்கு காயங்கள்

கண்ணாடி பாட்டில்களின் குப்பைகளை அகற்றுவதன் மூலம் வனவிலங்குகளின் நல்வாழ்வை பாதுகாக்க முடியும். வனவிலங்குகள் உடைந்த கண்ணாடியை உட்கொள்ளலாம். அல்லது கண்ணாடி பாட்டில்களால் விலங்குகளுக்கு காயங்கள் ஏற்படலாம். இதன் விளைவாக விலங்குகளுக்கு கடுமையான உடல்நலச் சிக்கல்கள் அல்லது உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். கண்ணாடி பாட்டில்களை அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் இருந்து அகற்றுவது பல்வேறு உயிரினங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்