கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி
திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்திட நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்திட நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
உள்கட்டமைப்பை மேம்படுத்த
கால்நடை வளர்ப்பவர்கள் அதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்காக பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் தொகுப்பின் கீழ் ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை பெற தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், கால்நடை இனப்பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல் மற்றும் கால்நடை கழிவு வளம் தரும் மேலாண்மை அலகு அமைத்தல் ஆகிய தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
வங்கிகளில் கடன்
மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக பெற முடியும். பயனாளிகள் பங்களிப்பாக 10 முதல் அதிகபட்சமாக 25 சதவீதம் பங்குத் தொகையும் அளிக்க வேண்டும். மேலும் 3 சதவீதம் வரை குறைந்த வட்டியில் நிதி உதவி அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்புவோர் முறையான திட்ட மதிப்பீடு அறிக்கையுடன் http://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.