அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க கோரி சேலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சரோஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சாவித்திரி, மாவட்ட செயலாளர் மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், முறையான பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கோஷங்கள் எழுப்பினர்
இதில் கலந்து கொண்ட பெண்கள் தரையில் அமர்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாநில துணை தலைவர் சிங்கார வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.