அங்கன்வாடி பெண் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பெண் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பெண் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் காலகட்டத்தில் ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், உணவுப் பொருட்களை மாதம்தோறும் காலதாமதம் இன்றி அந்தந்த அங்கன்வாடி மையத்தில் இறக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், பொருளாளர் சரோஜினி, சந்திரகலா, இந்திரா, குமாரி சுஜரிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காத்திருப்பு போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.