ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி- ரேஷன் கடை கட்டிடம்; கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
செங்கோட்டையில் ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி- ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்டு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் 12-வது வார்டு கே.சி.ரோடு பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொறியாளா் பிரிவு மேற்பார்வையாளா் காந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கலைவாணி, மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், அவைத்தலைவா் வி.பி.மூர்த்தி, நகரச்செயலாளா் கணேசன், நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.