அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா

இடையக்கோட்டை அருகே உள்ள வலையபட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மதுரைவீரன் கோவில் முன்பு 100 கிடாக்கள் வெட்டப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

Update: 2023-08-23 19:45 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள வலையபட்டியில் பிரசித்தி பெற்ற மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி முதல்நாளில், பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை அம்மன் முன்பு கும்பங்களில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு கோவில் முன்பு கும்பங்கள் எடுத்து வரப்பட்டு மாமன், மைத்துனர்கள் மீது ஊற்றி உறவுமுறையை பலப்படுத்தும் வழிபாடு நடந்தது.

2-ம் நாளில் கோவில் முன்பு பொங்கல் வைக்கப்பட்டு, ஊர் எல்லையில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேட்டுமருதூர் அங்காளபரமேஸ்வரி மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பாவாடைராயர், பேச்சியம்மன், வீரபத்திரர், சந்தனகருப்பு, மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

நேற்று காலை குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தப்பட்டது. அதையடுத்து மதுரைவீரன் கோவில் முன்பு 100 கிடாக்கள் வெட்டப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர் அவற்றின் இறைச்சியை சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்