முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இணையும் விழா: அன்புமணி ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது டாக்டர் ராமதாஸ் பேச்சு
அன்புமணியின் ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது என்று, பா.ம.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இணையும் விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் ரவிராஜ் தனது ஆதரவாளர்களுடன் தன்னை பா.ம.க.வில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.
இதை தொடர்ந்து அவரை வரவேற்று, டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
தாய் வீட்டுக்கு வந்துள்ள பா.ம.க. சொந்தங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தை பா.ம.க.வின் கோ ட்டையாக மாற்றி காட்டியவர், சில மாதங்களாக பா.ம.க.வில் இல்லை என்பது வருத்தம் தான். ஆனால் அவர் நெஞ்சத்தில் நானும், என்னுடைய நெஞ்சில் அவரும் உள்ளார்.
10 தொகுதிகளில் வெற்றி
டாக்டர் அன்புமணியின் ஆட்சி அமைய செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது. சரியான தருணத்தில் தான், ரவிராஜ் தாயைத் தேடி வந்து விட்டார். அவரது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட வரவேற்கிறேன்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ரவி ராஜ் தலைமையில் இணைந்து பணி செய்து 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் கூறுகையில், என்னை பற்றி தவறான தகவல்களை சொல்லி சதிகாரர்கள் என்னை டாக்டர் ராமதாசிடம் இருந்து பிரித்துவிட்டார்கள். ஆனால் தற்போது மீண்டும் நான் பா.ம.க.வில் இணைந்துள்ளேன். இங்கு இணைந்தது பதவிக்காக அல்ல.
இட ஒதுக்கீட்டு பிரச்சினை நீண்டு கொண்டே போகிறது. இதில் டாக்டர் ராமதாசுடன் சிறை செல்லவே பா.ம.க.வில் இணைந்துள்ளேன். ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் என்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது தான். இங்கு என்னுடன் வந்துள்ளவர்களின் எதிர் பார்ப்பும் அதுவே என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, மாநில தொழிற்சங்க செயலாளர் முத்துக்குமார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.