2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி - அன்புமணியை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேச்சு

2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி என அன்புமணியை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Update: 2022-05-28 08:27 GMT

சென்னை

பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அக்கட்சியின் பொதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே. மணி, கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

இந்திய வரலாற்றில் இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர், உலகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தியவர், உயிர் காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்தவர், புகையிலை ஒழிப்பு மற்றும் போலியோ நோய் ஒழிப்புக்காக 4 சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றவர், மிகவும் இளைய வயதில் உலக சுகாதார அவையை தலைமையேற்று நடத்தியவர், 50 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஐந்தாண்டுகளில் செய்தவர் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், மருத்துவத் துறையின் நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியால் பாராட்டப்பட்டவர், ஐ.நா. தலைமை செயலாளராக இருந்த பான்-கி-மூன் மரபுவரிசையை (Protocol) மீறி, அலுவலகத்திற்கு தேடி வந்து பாராட்டிய பெருமைக்குரியவர்,

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதி காத்தவர் என ஏராளமான பெருமைகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் கட்சியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார் என்று இந்தப் பொதுக்குழு நம்புகிறது.

தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஜி.கே.மணி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசை ஒருமனதாக தேர்வு செய்கிறது" என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்தனை காலம் கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர் ஜி.கே.மணி; ஜி.கே.மணிக்கு பாமக கௌரவ தலைவர் என்ற பொறுப்பை வழங்குகிறோம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.

நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான்.

நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் அன்புமணி. அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.

இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணி ராமதாஸ் கடந்து வந்த பாதை....!

பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கிய "பசுமைத்தாயகம்" எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பின் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்.

2004-ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணி ஒப்பந்தத்தின்ப்படி வழங்கப்பட்ட மாநிலங்களவை இடத்திற்கு தேர்வாகி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்புமணிக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.

2005ம் ஆண்டு கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சேவை வழங்க இவர் தொடங்கிய தேசிய ஊரக சுகாதார இயக்கம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை, அன்புமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டது தான்.

பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது.

புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படம் அச்சடித்தது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார்

பூரண மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அன்புமணி, இந்தியாவில் முதன்முறையாக தேசிய மதுக்கொள்கையை உருவாக்கினார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை உலக மது ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் அன்புமணி.

ராமதாஸ்-க்கு அடுத்து பாமகவின் முகமாக அறியப்பட்ட அன்புமணி, 2006ம் ஆண்டு அக்கட்சியின் இளைஞரணி தலைவராக உயர்ந்தார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அன்புமணி ராமதாஸ்..மாற்றம்… முன்னேற்றம்.. அன்புமணி.. என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்தித்த பாமக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸும் தோல்வி அடைந்தார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார் அன்புமணி.

2019-ம் ஆண்டு அதிமுக-பாமக ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை இடம் பாமக வழங்கப்பட்டது. இதன்மூலம் மீண்டும் எம்பியானார். தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களைக் கடந்து பாமக தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

Tags:    

மேலும் செய்திகள்