சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 76 வயது முதியவருக்கு 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது 76). இவர் அலுமினிய பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். அன்வர்பாஷா வியாபாரம் விஷயமாக சென்று வந்த இடத்தில் தந்தையை இழந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை அவ்வப்போது கடைக்கு அழைத்து சென்று திண்பன்டங்கள் வாங்கி கொடுத்துள்ளார். வயதுமுதிர்வு காரணமாக சிறுமியை அன்வர்பாஷா அழைத்து செல்வதை சிறுமியின் தாய் மற்றும் அப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்திய அவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பம் ஆனார். சில நாட்களுக்கு பின்னர் சிறுமி அடிக்கடி வயிறு வலிக்கிறது என்று கூறி உள்ளார். அவரின் தாயார் வயிறு வலிக்கான மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.
இதற்கிடையே கடந்தாண்டு சிறுமிக்கு வீட்டில் வைத்து ஆண்குழந்தை பிறந்தது. அதன்பின்னரே அன்வர்பாஷா பாலியல் பாலியல் பலாத்காரம் செய்தது சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் அன்வர்பாஷாவை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இருதரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கலைபொன்னி தீர்ப்பு வழங்கினார்.
அதில், சிறுமியை திண்பன்டங்கள் வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக கூறினார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் பலத்த காவலுடன் அன்வர்பாஷாவை வேனில் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.