1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த முதியவர் கைது
1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி பதுக்கல்
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியில் துரைசாமி (வயது 62) என்பவருக்கு சொந்தமான ஆயில் மில்லில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு, ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக மாற்றி 850 கிலோவும், முழு அரிசியாக 200 கிலோவும் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 1 டன் எடையுள்ள அவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் துரைசாமியை கைது செய்தனர்.
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
*திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் கரை பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக காந்தி மார்க்கெட் வரகனேரியைச் சேர்ந்த ரவுடி ஹசன் அலி (26) என்பவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர் மீது 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, ஹசன் அலியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ஹசன் அலியிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
டாக்டர் மீது தாக்குதல்
*திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் ஜவகர் பாபு (33). டாக்டரான இவர் காரில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது. இதனால் டாக்டர் ஜவகர் பாபு காரை சாலையோரம் நிறுத்தியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த தாயும், மகனும் டாக்டரை தாக்கியதோடு, காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி தற்கொலை
*திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சூசைராஜ் (35). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சூசைராஜ் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு சூசைராஜ் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சூசைராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.