பயணிகளை பதம்பார்க்கும் இரும்பு கம்பி
சிவகாசி பஸ் நிலையத்தில் இரும்பு கம்பியானது பயணிகளின் காலை பதம் பார்க்கிறது.;
சிவகாசி,
சிவகாசி நகரின் மைய பகுதியில் மாநகராட்சி பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்துக்கு 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களும், 10 மினிபஸ்களும் வந்து செல்கிறது. இதன் மூலம் தினமும் 6 ஆயிரம் பயணிகள் பயன்பெறுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதி சரி செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த சிமெண்ட் தூணை ஊழியர்கள் அகற்றினர். அந்த தூணில் இருந்த இரும்பு கம்பி ஒன்று முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கம்பி பஸ் நிலையத்துக்குள் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளை பதம் பார்த்து வருகிறது. வயதான பலர் இந்த இரும்பு கம்பியில் மோதி காயம் அடையும் நிலை தொடர்கிறது. மோட்டார் சைக்கிள்களும் பஞ்சராகி வருகிறது. தேவையற்ற விபத்தினை தடுக்க அந்த இரும்பு கம்பியை முழுமையாக அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.