3 தங்கப்பதக்கங்கள் வென்ற அரியலூர் வீரருக்கு உற்சாக வரவேற்பு
3 தங்கப்பதக்கங்கள் வென்ற அரியலூர் வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
மீன்சுருட்டி:
தங்கப்பதக்கங்கள் வென்றார்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்-உமாபிரியா தம்பதியின் மகன் ஆகாஷ். தடகள வீரரான இவர் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இதைத்தொடர்ந்து நேபாளம் நாட்டில் இந்தோ-நேபாளம் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார். இதில் இந்தியா, நேபாளம், இலங்கை, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 x 4 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் ஆகாஷ் வெற்றி பெற்று, தங்கப் பதக்கங்களை வென்றார். இதையறிந்த மீன்சுருட்டி பகுதி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உற்சாக வரவேற்பு
இதைத்தொடர்ந்து ஆகாஷ் நேற்று ரெயிலில் அரியலூர் வந்து, அங்கிருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு வந்தார். மீன்சுருட்டி பஸ் நிறுத்தத்தில் அவரை, ெபாதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மீன்சுருட்டி கடைவீதியில் பட்டாசு வெடித்தனர். மீன்சுருட்டி வர்த்தக சங்க தலைவர் ராஜா ஜெயராமன் சார்பில் அவருக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மூவேந்தர் முன்னேற்ற கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் இளையராஜா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். முத்துசேர்வாமடத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து ஆகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், ராணுவத்தில் பணிபுரிவதே தனது வாழ்நாள் லட்சியம். இதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்தபோது விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டு, போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன். எதிர்காலத்தில் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறேன். எனக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில், எனது உறவினர்கள் நிதியுதவி செய்தனர். மேலும் பயிற்சிகளை மேற்கொள்ள எனக்கு ஏதேனும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் நிதி உதவி செய்தால் நிச்சயம் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வெல்வேன், என்றார்.