(செய்திசிதறல்) மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி

மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-05-08 20:29 GMT

மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி அரிசனதெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 37). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலையில் கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடிக்கால் பட்டியை சேர்ந்த திலீப்ராஜ் (21) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாரதிராஜா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

*திருச்சி வடக்கு தாராநல்லூர் தோப்புதெருவை சேர்ந்தவர் திவாகர் (21). இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழக்கடையில் திருடியவர் கைது

*திருச்சி தில்லைநகர் 7-வது குறுக்கு ராம்நகரை சேர்ந்தவர் முஸ்தபா (44). இவர் பாலக்கரை மேலப்புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5,400 திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழக்கடையில் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வசந்தவேல் (25) என்பவரை கைது செய்தனர்.

முதியவர் சாவு

*கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் ரெங்கநாதன் (60). இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 1-ந் தேதி திருச்சி வந்து மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் செந்தில்செல்வன் (36). இவர் மார்சிங்பேட்டை பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரை தாக்கியதாக மார்சிங்பேட்டையை சேர்ந்த அருண்குமார் (25), செம்பட்டு பகுதியை சேர்ந்த நெல்சன் (24) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் செம்பட்டு பகுதியை சேர்ந்த பிரிட்டோ (23), சரண் (25) உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

*முசிறி மேல வடுகபட்டியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (65). இவரது வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முசிறி பெரியார் பாலம் அருகில் காவிரி ஆற்றில் மது அருந்தி கொண்டிருந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த அஜ்மீர் (30), திருச்சி காஜா மலையைச் சேர்ந்த வேதகிரி என்கிற வினோத் (40) ஆகியோரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் அவர்கள் அங்கமுத்து வீட்டில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

*கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னகண்டியாகுப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வெங்கடேசன் (21). இவர் சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.படித்து வருகிறார். இவரும் இவரது நண்பர் ஹரிஷ்அகமது என்பவரும் விடுதி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தனர். அவைகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடியவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்