லாரி கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உடல் நசுங்கி பலி
வேப்பூர் அருகே விபத்து: லாரி கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உடல் நசுங்கி பலி
ராமநத்தம்
ஆந்திராவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி அடுத்த விராலிமலையில் உள்ள தனியார் இரும்பு கம்பெனி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆந்திராவை சேர்ந்த குருவையா(வயது 40) என்பவர் லாரியை ஓட்டினார். விராலிமலை இரும்பு கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த அதே பகுதியை சேர்ந்த சுப்பன் மகன் தங்கராசு(39) என்பவரும் லாரியில் உடன் வந்தார்.
நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் வந்த தங்கராசு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தங்கராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், காயம் அடைந்த குருவையாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.