2 நாட்களாக போக்கு காட்டிய யானைபண்ணாரி வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்
ஊருக்குள் புகுந்து 2 நாட்களாக போக்கு காட்டிய யானையை பண்ணாரி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.;
சத்தியமங்கலம்
ஊருக்குள் புகுந்து 2 நாட்களாக போக்கு காட்டிய யானையை பண்ணாரி வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஊருக்குள் புகுந்தது
சத்தியமங்கலம் அருகே கடந்த 6-ந்தேதி விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து ஒற்றையானை வெளியேறியது. இந்த யானை உக்கரம் கிராமத்துக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு இருந்து கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கொண்டது. அதனைதொடர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கு இருந்து வெளியேறவில்லை. தொடர்ந்து அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதனால் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் போராடி வந்தனர்.
பண்ணாரி வனப்பகுதிக்குள்...
பின்னர் சத்தியமங்கலம் அருகே பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற ஒற்றையானை அக்கரை நெகமம் வழியாக பவானி ஆற்றை கடந்து சென்றது. பின்னர் ஆற்றங்கரையோரமாக அங்கும், இங்குமாக சுற்றி கொண்டும், ஆற்றுக்குள் இறங்கி கொண்டும் போக்கு காட்டி வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து குறைந்ததும் யானையை பகுத்தம்பாளையம், ராஜன் நகர் வழியாக விரட்டினர். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் யானையை வனத்துறையினர் அடர்ந்த பண்ணாரி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
கடந்த 2 நாட்களாக போக்கு காட்டிய யானை வனப்பகுதிக்குள் சென்றதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.