பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின் ஊழியர் தவறி விழுந்து சாவு - டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின் ஊழியர் தவறி விழுந்து உயிரிழந்தார். டிரைவர், கண்டக்டர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.;
பேரையூர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் டி.கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ராஜா இரவு பணிக்கு செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் டி.கல்லுப்பட்டிக்கு ஏறி உள்ளார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். பஸ் குன்னத்தூர் சாலை வளைவில் வரும்போது, ராஜா பஸ்சில் இருந்து திடீரென்று கீழே சாலையில் விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜாவை படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதித்த அரசு பஸ் கண்டக்டர் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி(58) மீதும், அதிகமான பயணிகள் இருந்தும், கவனத்துடன் பஸ்சை ஓட்டாமல், அதிக வேகமாக ஓட்டிச் சென்ற டிரைவர், உசிலம்பட்டி தாலுகா மேலமாதரையை சேர்ந்த சந்திரமோகன்(48) மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.