திருச்சி கருமண்டபம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் முதியவர் பலி

திருச்சி கருமண்டபம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் முதியவர் பலியானார். இதனிடையே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-06-27 19:48 GMT

திருச்சி கருமண்டபம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் முதியவர் பலியானார். இதனிடையே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் முதியவர் பலி

திருச்சி கருமண்டபம் மெயின்ரோட்டில் ஜே.பி.நகர் அருகே நேற்று நள்ளிரவு முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தடுமாறி கீழே விழுந்த முதியவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த விபத்தை கண்டு அந்த பகுதியினர் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

விபத்தை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள், முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ¾ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பாதாள சாக்கடை அமைக்கும் பணி

தொடர்ந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் விபத்தில் இறந்த முதியவர் கருமண்டபம் குளத்துக்கரையை சேர்ந்த கருப்பசாமி (வயது 65) என தெரியவந்தது.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி கருமண்டபம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல கடும் சிரமம் அடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்