வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்
போக்குவரத்து வார விழாவையொட்டி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.;
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் போக்குவரத்து போலீசார், எதிர் திசையில் சாலையை கடந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர். மேலும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து, விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். காரில் வந்த நபர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனம் இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.