சமையல் கியாஸ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னையில் நடந்தது
சென்னையில் சமையல் கியாஸ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை இந்திய எண்ணெய் நிறுவனம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் 'சமையல் கியாஸ் பாதுகாப்பான பயன்பாடு' குறித்த விழிப்புணர்வு முகாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. எண்ணெய் நிறுவனத்தின் தமிழக பொது மேலாளர் கே.எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். சென்னை வருமான வரி தலைமை கமிஷனர் ஜெயந்தி கிருஷ்ணன் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் வருமான வரி கமிஷனர் என்.வி.வித்யாதர், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமையல் கியாஸ் பயன்பாடு குறித்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.
மேற்கண்ட தகவல்கள், வருமான வரி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.