தீபாவளியன்று சென்னையில் நடந்த விபத்து..! கொளுந்து விட்டெரிந்த மருந்து குடோன்!!
சென்னையில் உள்ள மருந்து குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.;
சென்னை:
சென்னை அசோக் நகர் 2வது அவென்யூ பகுதியில் மருந்து குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று திடீரென குடோனில் தீப்பற்றியது. கட்டிடத்தின் முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்தன.
தகவலறிந்து வந்த அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர் மற்றும் தாம்பரம் பகுதியை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், கொளுந்து விட்டு எரிந்த கட்டிடத்தின் தீயை அணைத்தனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால், 2 மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்தில் மாஸ்க், கையுறை, சானிடைசர், கார், இருசக்கர வாகனம், மினி லோடு வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. கட்டிடத்தின் வெளிப்புறத்திலும் தீப்பற்றி எரிந்ததால், அருகில் இருந்த கட்டிடங்களின் ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தீ விபத்தின் சேதங்கள் குறித்து விசாரித்தனர்.