8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மணிகண்டன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்கு செல்லாமல் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது மணிகண்டனின் பக்கத்து வீட்டிற்கு அவரது உறவினர்களான 10 வயது சிறுவன் மற்றும் 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஆகியோர் வந்துள்ளனர். அந்த வீட்டில் ஆளில்லாத நேரத்தில், மணிகண்டன் அந்த வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து சிறுமியிடம் ஒளிந்து விளையாடலாம் என கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை அழுதுக்கொண்டே கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தினார். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.