காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலி
நெல்லையில் காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;
நெல்லையில் காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தனியார் நிறுவன ஊழியர்
நெல்லை சேந்திமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பைசல் (வயது 31). தனியார் நிறுவன ஊழியரான இவர் தற்போது பாளையங்கோட்டை மார்க்கெட் கோட்டூர் ராஜாகோவில் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவருடைய 11 மாத ஆண் குழந்தை ரசாக், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். எனவே, அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை ரசாக்கை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதில் குணமடைந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
மீண்டும் காய்ச்சல்
தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு குழந்தை ரசாக்குக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே குழந்தையை மீண்டும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குழந்தைக்கு குணமாகாததால், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை ரசாக் பரிதாபமாக உயிரிழந்தான். இறந்த குழந்தையின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்ைட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு மருத்துவ முகாம்
நெல்லையில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது. ஏராளமானவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் பேட்டையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்தாள். காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்வதால், காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.