ஆனைமலை போலீஸ் நிலையத்தை அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. முற்றுகை
தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஆனைமலை போலீஸ் நிலையத்தை அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.
ஆனைமலை அருகே கருப்பம்பாளையம் இ.பி. கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆனால் வாடகை தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பம்பாளையம் ஊராட்சி தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான கன்னிமுத்து என்பவர் மணிகண்டனின் வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட மணிகண்டனை குடிபோதையில் இருந்த கன்னிமுத்து அறையில் அடைத்து கைகளை கட்டி வைத்து கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கன்னிமுத்து மீது ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் அவரை கைது செய்யாததை கண்டித்து வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் பொதுமக்கள் ஆனைமலை போலீஸ் நிலையத்தை முற்றுைகயிட்டனர். மேலும் அவரை விரைந்து கைது செய்ய கோரி போலீசாரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.