அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பொலிவு பெறும் ஈரோடு ரெயில் நிலையம் - கட்டுமான பணிகள் தீவிரம்

ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் மின்னணு தகவல் பலகை அமைக்கப்படுகிறது.

Update: 2024-06-21 15:48 GMT

ஈரோடு,

மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேசன் திட்டத்தின் கீழ் 554 ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர், மொரப்பூர், பொம்மிடி, ஈரோடு, கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், நாமக்கல், சின்ன சேலம் ஆகிய 8 ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் ரூ.38 கோடியே 9 லட்சம் செலவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் காளை மாட்டு சிலை பகுதியில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. இதற்காக மேற்கூரை அமைப்பதற்காக கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், இருசக்கர வாகனங்களை சிரமமின்றி நிறுத்தும் வகையில் 'இன்டர்லாக்' கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் மேற்கூரைகள் அமைக்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் வாகனங்கள் எளிதாக வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்வதற்கு புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் 2 மிகப்பெரிய அழகிய நுழைவு வளைவு அமைக்கப்பட உள்ளன. வாகன நிறுத்தம் விசாலமாக அமைக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 100 நான்கு சக்கர வாகனங்கள், 800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்டமாக வாகன நிறுத்துமிடம் அமைகிறது. பயணிகள் பிளாட்பாரங்களுக்கு விரைவாக வந்து சேரும் வகையில் அகலமான புதிய நடைபாதை அமைக்கப்படுகிறது. 4 நகரும் படிக்கட்டுகள், 4 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன.

ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் மின்னணு தகவல் பலகை அமைக்கப்படுகிறது. நிலையத்துக்கு வரும் ரெயில்களின் விவரம், அவை நிறுத்தப்படும் பிளாட்பாரங்கள் குறித்த தகவல்களை முழுமையாக அனைத்து பயணிகளும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்