குளிர்பான பாட்டில்கள் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
கோனோரி கங்கையம்மன் கோவிலில் பூக்கள் அலங்காரம் தவிர்க்கப்பட்டு விதவிதமான 700 குளிர்பான பாட்டில்களால் கங்கை அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணநகர் பகுதியில் உள்ள கோனோரி கங்கையம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவின்போது, தூக்கி வீசப்படும் பூக்களுக்கு ஏன்? ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணிய கோவில் விழாக்குழுவினர் பக்தர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் உணவு பொருட்களால் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் அம்மன் அலங்காரத்தை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு இந்த கோவிலில் பிஸ்கட் பாக்கெட், சிப்ஸ் பாக்கெட், சாக்லேட்டுகள், இனிப்பு பாக்கெட்கள் போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா வந்துள்ளது. வீதி உலா முடிந்து உற்சவர் அலங்காரம் கலைக்கப்பட்டவுடன் அவற்றை பிரித்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். பக்தர்களும் அதை பிரசாதம் போல் வாங்கி சாப்பிடுவார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் பூக்கள் அலங்காரம் தவிர்க்கப்பட்டு விதவிதமான 700 குளிர்பான பாட்டில்களால் கங்கை அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தது. 508 பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்து அம்மனை வழிபட்டனர். சுற்றுலா வந்த மக்கள் பலர் வீதிகளில் செல்லும் போது குளிர்பான பாட்டில்கள் அலங்கார கோலத்தில் அருள்பாளித்த அம்மனை புகைப்படம் எடுத்து ரசித்ததை காண முடிந்தது.