தசரா திருவிழாவில் அம்மன் சப்பரங்கள் பவனி
பாளையங்கோட்டை, டவுனில் தசரா திருவிழாவில் அம்மன் சப்பரங்கள் பவனி நடந்தது.
தசரா திருவிழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை, டவுனில் அம்மன் கோவில் சப்பரங்கள் பவனி வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தசரா திருவிழா
நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் 25-ந் தேதி தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது.
பின்னர் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. இரவில் அம்மன் சப்பரங்கள் பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது. அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு மேளதாளம் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கூடியிருந்த பெண்களும் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் அந்தந்த கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
சப்பர பவனி
இந்த நிலையில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு 12 அம்மன் கோவில்களிலும் துர்கா ஹோமம், யாக சாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 12 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள தெருக்களில் பவனி வந்தன.
சூரசம்ஹாரம்
விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலிலும், பகல் 1 மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் முன்பும், இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியிலும் அணிவகுத்து நிற்கும். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து அம்மன்களை வழிபடுவார்கள். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.
நெல்லை டவுன்
இதேபோல் நெல்லை டவுனில் புட்டாபுரத்தி அம்மன் கோவில், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாரி அம்மன், வாகையடி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், துர்க்கை அம்மன், தங்கம்மன், மாரியம்மன், சாலியர் தெரு மாரியம்மன் உள்ளிட்ட 30 அம்மன் கோவில்களில் நேற்று தசரா திருவிழா நடந்தது.
இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடந்தது.