ராமேசுவரம் கோவிலில் அம்மன் தேரோட்டம்

ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் அம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update: 2023-07-21 18:45 GMT

ராமேசுவரம், 

ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் அம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் கோவில்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் 9-ம் நாளான நேற்று அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில், கோவிலின் கிழக்கு வாசல் எதிரே தேரில் எழுந்தருளினார்.

பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

இதை தொடர்ந்து விநாயகர், சண்டிகேசுவரர் தேர்களையும், அம்மன் தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அம்மன் தேரை உள்ளூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் இழுத்தனர். காலை 10.20 மணிக்கு கிழக்கு வாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட அம்மன் தேர், பக்தர்கள் வெள்ளத்தில் வந்தது. மதியம் 12 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரில் வீற்றிருந்த பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று இரவு 8 மணிக்கு அம்மன், வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 10-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு அம்மன் தங்க பல்லக்கில் காட்சி தருகிறார். மதியம் 12 மணிக்கு கோவிலில் உள்ள சிவதீர்த்தத்தில் அம்மன் மஞ்சள் நீராடல் மற்றும் பூரம் தொழுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

திருக்கல்யாணம்

11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார்.

பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

நடை திறப்பில் மாற்றம்

மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்றைய தேரோட்ட விழாவில் கோவில் மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகர், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் வெள்ளைச்சாமி பத்மநாபன், பா.ஜனதா மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் முருகன், மாரி பிச்சை, நம்பு ராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்