சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமெரிக்க கல்வி கண்காட்சி நேற்று நடந்தது. சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துடன் அமெரிக்காவில் உயர்கல்வி பற்றிய தகவல்களை அளிக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான எஜூகேஷன் யு.எஸ்.ஏ. என்ற அமைப்பும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தியது.
கண்காட்சியில் அங்கீகரிக்கப்பட்ட 29 அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பங்கேற்றன. இந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை, முதுநிலை படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு, சேர்க்கை விதிமுறைகள், விசா நடைமுறைகள், அமெரிக்க வாழ்க்கை முறை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.
அமெரிக்க பல்கலைக்கழக, கல்லூரி பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் படிக்க விரும்பும் தமிழக மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேசும்போது, 'இந்திய மாணவர்களின் கனவுகளை அடைய உதவும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு வெற்றிக்கான பாதையை வழிகாட்டுவதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது' என்றார்.