தொடர் சர்ச்சையில் சிபிஎஸ்இ: அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள்? பாடப்புத்தகத்தில் சர்ச்சை கேள்வி
அண்ணல் அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள்? என சின்மயா மிஷன் அறக்கட்டளை தயாரித்துள்ள பாடப்புத்தகத்தில் சர்ச்சை கேள்வி எழுந்துள்ளது.
சென்னை,
அண்மையில் சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது. பள்ளி செல்லும் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில், வர்ணாசிரமம் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், 6ஆம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி மற்றும் என்சிஆர்டி ஆகிய எந்த வாரியத்தாலும் அங்கீகரிக்கப்படாமல் வித்யாலயா வகை பள்ளிகளுக்கென இந்த புத்தகம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்தை பயில வேண்டிய வயதில் இளம் மாணவர்கள் மனதில் வர்ணாசிரமத்தை புகுத்தும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.