அம்பத்தூரில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை: மகன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிய தாய் - கூட்டாளிகள் 4 பேருடன் கைது
அம்பத்தூரில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலையை அரங்கேற்றியது தெரிந்தது.;
சென்னை அம்பத்தூர் சண்முகபுரம், நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (வயது 50). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 9-ந்தேதி மாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து மேக்ஸ் வெல்லை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (30) என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. உதயகுமாரின் தாய் லதா(49), தனது மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக லதா மற்றும் அவரது கூட்டாளிகளான அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் (24), வினோத் (24), செங்குன்றத்தை சேர்ந்த யுவராஜ் (28), அம்பத்தூரைச் சேர்ந்த நாகராஜ் (62) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
லதாவின் மகன் உதயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேக்ஸ்வெல்லின் மகன்களான மோசஸ், லாரன்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்களை கொலை செய்ய லதா தனது கூட்டாளிகளுடன் திட்டம் தீட்டி வந்தார். தினமும் மாலை 6 மணியளவில் மோசஸ் தனது வீட்டுக்கு வருவதை நோட்டமிட்ட அந்த கும்பல் 9-ந்தேதி மாலை அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.
ஆனால் வீட்டுக்குள் மோசஸ் இல்லை. மேக்ஸ்வெல் மட்டும் தூங்கி கொண்டிருப்பதை கண்டனர். இதனால் மேக்ஸ்வெல்லை கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரது மகன்கள் 2 பேரும் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிர் தப்பினர்.
கைதானவர்களில் நாகராஜிம், யுவராஜிம் தந்தை, மகன் என்பது குறிப்பிடத்தகக்கது. கைதான லதா உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.