மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கொன்றது அம்பலம்

கட்டிட உரிமையாளர் சாவு வழக்கில், மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-25 19:15 GMT

பொள்ளாச்சி

கட்டிட உரிமையாளர் சாவு வழக்கில், மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட மேற்பார்வையாளர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையபுரத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி மாலையில் அவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே காரை திருப்ப முயன்று உள்ளார். அந்த வழியாக சமத்தூரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ஸ்ரீதர் (34) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள், காரின் பின்பகுதியில் மோதியதாக தெரிகிறது. மேலும் ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றார். இதையடுத்து காரை ஓட்டி வந்த வல்லரசு, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி சத்தம் போட்டார். மேலும் அவர் காரில் பின்னால் துரத்தி சென்றார். தொடர்ந்து அவர் உழவர் சந்தை அருகில் சென்ற போது, மோட்டார் சைக்கிளின் பின்புறம் காரால் மோதினார். இதில் ஸ்ரீதர் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

கொலை வழக்காக மாற்றம்

உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, வல்லரசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கோவையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கட்டிட மேற்பார்வையாளரை கொன்றது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்குக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்