அமராவதி ஆற்றில் ஆபத்தான குளியல் போடும் வாலிபர்கள்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அமராவதி ஆற்றில் ஆபத்தான முறையில் குளியல் போடும் வாலிபர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-03 17:11 GMT

படித்துறைகள்

அமராவதி அணையிலிருந்து புறப்படும் காவிரியின் துணை நதியான அமராவதி ஆற்றின் மூலம் மடத்துக்குளம், கொழுமம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் கரையோர கிராமங்கள் பயன்பெறும் வகையில் நூற்றுக்கணக்கான குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் வழிநெடுக உள்ள கிராமங்களில் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது என மக்கள் கூட்டம் அதிக அளவில் திரள்கிறது. ஆனால் பெரும்பாலான கிராமப் பகுதிகளில் ஆற்றில் பாதுகாப்பான முறையில் குளிப்பதற்கு படித்துறைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் பாறைகள் நிறைந்த மற்றும் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் குளித்து வருகிறார்கள்.

நீச்சல் போட்டி

குறிப்பாக வாலிபர்கள் ஆபத்தை உணராமல் உயரமான பாறைகளிலிருந்து ஆற்றில் குதிப்பது, ஆழமான பகுதிகளில் நீந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் குழுவாக இணைந்து ஆற்றில் நீச்சல் போட்டி நடத்துகிறார்கள். இவ்வாறான செயல்களால் ஆற்றில் ஆழமான பகுதியில் உள்ள சுழல்களில் சிக்கியோ, பாறைகளில் மோதியோ விபத்துகள் ஏற்படக்கூடும்.

அதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராமப்புற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கண்காணிப்புப்பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மடத்துக்குளம், கணியூர் உள்ளிட்ட ஆற்றோர கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் குளிக்கும் வகையில் படித்துறைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்