குப்பைகளை கொட்டி அமராவதி ஆற்றை அழிக்கும் அவலம்...

Update: 2023-09-27 17:24 GMT


மடத்துக்குளம் அருகே அமராவதி ஆறு குப்பைகளைக் கொட்டி மூடப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பாசன ஆதாரம்

பழனிமலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு பாம்பாறு, சின்னாறு, தேவாறு ஆகியவற்றுடன் கலந்து அமராவதி அணையை வந்தடைகிறது.பின்னர் அமராவதி அணையிலிருந்து தொடங்கி கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 282 கிலோமீட்டர்கள் பயணம் செய்து கரூர் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆறு திருப்பூர், கரூர் மாவட்டங்களை வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களின் பாசன ஆதாரமாக உள்ள அமராவதி ஆற்றில் வழி நெடுகிலும் ஏராளமான குடிநீர்த்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமராவதி ஆறு கழிவுகளால் பாழாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கழிவு நீர்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கால்நடைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு உள்ளது.புழு, பூச்சி முதல் மீன்கள், பறவைகள் என லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வாதாரமாக இந்த ஆறு உள்ளது.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றை பாதுகாப்பதற்குப் பதிலாக பாழ்படுத்தும் செயலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றின் வழித்தடத்தில் பல இடங்களில் தொழிற்சாலைகளின் கழிவுகள் அமராவதி ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்கள் அமராவதி ஆற்றில் தான் முடிவடைகின்றன. இதனால் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக கழிவு நீர் ஆற்றில் கலப்பதுடன், பாலிதீன் கழிவுகள், குப்பைகள் என பலவிதமான கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன. மேலும் சில இடங்களில் ஆற்றங்கரையில் பன்றி வளர்ப்பு நடைபெறுவதால் கழிவுகள் ஆற்றில் கலக்கிறது.

பொக்லைன் எந்திரம்

பல இடங்களில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை இருப்பு வைக்கும் இடமாக அமராவதி ஆற்றங்கரை பயன்பட்டு வருகிறது.இதனால் குப்பைகளும் கழிவுகளும் ஆற்று நீரில் கலந்து நீரை பாழாக்குவதுடன் நோய் பரப்பும் நிலையும் உள்ளது. ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆற்றில் தள்ளி ஆற்றை பாழாக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.

இதனால் ஆற்று நீர் பாழாவதுடன் படிப்படியாக குறுகியும் வருகிறது. எனவே விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் உயிர் நாடியாக உள்ள அமராவதி ஆற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமராவதி ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டுவதற்கும் இருப்பு வைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். ஆலைக்கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்