ஆழ்வார்திருநகரி கோவிலில்நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி உரை ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு
ஆழ்வார்திருநகரி கோவிலில் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி உரை ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.;
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தமிழ் வேதம் எனும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி உரை ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆய்வு
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பாதுகாப்பதோடு நூலாக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது தலைமையில் 12 சுவடியியல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் உள்ள 199 கோவில்களில் கள ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளை கண்டறிந்து பாதுகாத்து வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடி களஆய்வாளர் ம.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு அரிய ஓலைச்சுவடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவடியியல் ஆய்வாளர் க.தமிழ்ச்சந்தியா தலைமையிலான குழுவினர் சுவடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாய்மொழி உரை ஓலைச்சுவடி
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-
ஆழ்வாதிருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 19 சுவடிக்கட்டுகள் கண்டறியப்பட்டன. இந்த சுவடிக்கட்டுகளில் ஒரு கட்டு தமிழ் வேதம் என்று போற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி எனும் நூலின் இரண்டாம் பத்துக்கும், மூன்றாம் பத்துக்கும் உரை மட்டும் உள்ள ஓலைச்சுவடி ஆகும். இந்த சுவடியில் உரை சற்று சிதைந்த நிலையில் முழுமையற்று காணப்படுகிறது. எனினும் இந்த சுவடி ஆய்வுக்குரிய அரியச் சுவடி ஆகும்.
மேலும் இந்த கோவிலின் வெஞ்சினப் பண்டாரக் குறிப்புகள் அடங்கிய 18 சிறிய ஓலைச்சுவடி கட்டுகளும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த சுவடி கட்டுகளில் கோவிலின் பழமை, வரவு-செலவு கணக்கு குறிப்புகள் உள்ளன. இந்த சுவடிகள் பழமையானவை என்பதாலும், சுவடிகள் பூச்சிகள் அரித்து செல்லரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாலும் அவற்றை உடனே பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.