முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா
சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி சிகரம் நோக்கி என்ற முன்னாள் மாணவர்கள் (1979-1986) சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மோகன், இளங்கோவன், அமைப்பின் செயலாளர் சரவணன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் லெஷ்மிதரன் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் கலந்தாய்வு நடந்தது. இதில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 80 வயதை கடந்த 15-க்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்களும், 30-க்கும் மேற்பட்ட இந்நாள் ஆசிரியர்களும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழி, முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலர் வீராசாமி ஆகியோர் பரிசளித்தனர். விழாவில் சிகரம் நோக்கி அமைப்பு உறுப்பினர்கள் அழகுமுருகன், நாகபூஷணம், குமரேசன், கோகுல்ராஜன், மணிவர்மன், விஜயகுமார், ராஜூ மற்றும் பழைய மாணவிகள் கவிதா, மீனா, மாலா, சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மணிவண்ணன், பார்த்திமலை ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.