98 டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 98 டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.;
நெல்லை மாவட்டத்தில் 96 டாஸ்மாக் கடைகள், தென்காசி மாவட்டத்தில் 68 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 2 மாவட்டங்களிலும் 164 கடைகள் உள்ளன. கொரோனா காலத்தில் மதுக்கடைகள் குறிப்பிட்ட காலம் மூடப்பட்டிருந்தன. பின்னர் மதுக்கடைகள் திறந்திருந்த போதிலும், அதனுடன் இணைந்திருந்த மது குடிக்கும் இடமான பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளுடன் பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு, அவை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மீதமுள்ள 98 கடைகளில் பார்களை எடுத்து நடத்துவதற்கு ஏலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஏலம் தொகை குறிப்பிட்டு போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று ஏராளமானோர் தங்களது பகுதி டாஸ்மாக் பார் ஏலம் கேட்டு மனு போட்டிருந்தனர். நேற்று மாலை 5 மணி அளவில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கந்தன் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு பார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.