ஒதுக்கீடு செய்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்: மாநகராட்சி கடைகள் ஏல முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க நேரிடும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
மாநகராட்சி கடைகள் ஏல முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க நேரிடும் என்று எச்சரித்த மதுரை ஐகோர்ட்டு, ஒதுக்கீடு செய்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மாநகராட்சி கடைகள் ஏல முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க நேரிடும் என்று எச்சரித்த மதுரை ஐகோர்ட்டு, ஒதுக்கீடு செய்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மாநகராட்சி கடைகள் ஏலம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளேன். தமிழ்நாடு வெளிப்படை ஏல அறிவிப்பு சட்டத்தின்படி ஏல அறிவிப்பினை விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் ஏலத்தில் அதிக தொகை கேட்கும் நபருக்கு ஏலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள 34 கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பினை நடத்துவதற்கான கூட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. ஆனால் ஏல அறிவிப்பு பற்றி செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யவில்லை. பின்னர் 34 கடைகளுக்கான ஏலம் நடந்தது. இதில் மொத்தம் 47 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, ஏராளமானவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை.
நீதிபதிகள் எச்சரிக்கை
குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து ஏலத்தை நடத்தி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இது ஏற்புடையதல்ல. எனவே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள 34 மாநகராட்சி கடைகளை ஏலம்விட்டு, குறிப்பிட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, விதிமுறைகளை பின்பற்றி ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளுக்கான ஏலத்தில் மோசடி நடந்துள்ளது. ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பணம் வீணாக செலவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஊழல் நடந்தது உறுதியானால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கடைகள் ஒதுக்கீட்டிற்கு தடை
பின்னர் 34 கடைகள் ஏலம் விடப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அந்த கடைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால், சீல் வைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து வருகிற 23-ந்தேதி அன்று திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.