வால்பாறையில் கோடைவிழா நடத்த ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

வால்பாறையில் கோடைவிழா நடத்த ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2023-05-16 22:30 GMT

வால்பாறை

வால்பாறையில் கோடைவிழா நடத்த ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

வால்பாறையில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

வார்டு பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால், அனைத்து வார்டு பகுதியிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியை அதிகரிக்க வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்த தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டவில்லை. எனவே தெருவிளக்கு பராமரிப்பு பணியை செய்து வரும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

தொழிலாளர்களுக்கு விடுமுறை

வால்பாறை நகர், மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து விடுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறையில் அனுமதியில்லாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறும் கோடை விழாவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முழுமையாக பங்கு பெறும் வகையில் அவர்களுக்கு 27-ந் தேதி விடுமுறை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோடைவிழாவை சிறப்பிக்க வருகின்ற நாட்களில் முழுமையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று தலைவர் அழகுசுந்தரவள்ளி துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பொறுப்பு வெங்கடாசலம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

வால்பாறையில் கோடை விழாவை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கொண்டாடுவதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தும், கோடைவிழா கொண்டாட அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்