அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ.1,032 கோடி ஒதுக்கீடு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.;

Update: 2023-06-06 20:42 GMT

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா, பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கி திறப்பு விழா நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்று பேசினார்.

குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அந்த வகையில் 297 பேருக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.

பின்னர், பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணப்பலன்களை வழங்கினார். ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடியே 95 லட்சத்திற்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

போக்குவரத்து கழகத்தின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் தற்போது இந்த துறை இந்தியாவிலேயே சிறந்த துறையாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணப்பலனுக்காக முதலில் ரூ.325 கோடி, அதைத்தொடர்ந்து ரூ.200 கோடி நிதியை முதல்-அமைச்சர் தந்தார். தற்போது ஓய்வூதியர்கள் பணப்பலன் பெறுவதற்காக ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிந்திருக்க வேண்டும். அதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலைமைகளை முதல்-அமைச்சர் சரிசெய்து கொண்டிருக்கிறார்.

கடந்த கால ஆட்சியில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அவர்களுடைய பணிக்காலத்தையொட்டி பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அதுவும் தற்போது உள்ள சீனியர், ஜூனியர்கள் என பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு 5 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.40 கோடி அதிகம் ஆகும் என்றாலும் அதை பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

கேரளாவில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் 15-ந் தேதிக்கு பிறகு தான் வழங்கப்படுகிறது. ஒரு சில மாதங்களில் 30-ந் தேதி கூட சம்பளம் ெகாடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 1-ந் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்வதற்கு அரசு நிதி வழங்குகிறது. இதன்மூலம் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவரை மகளிர்கள் ரூ.293 கோடிக்கு பஸ்சில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் சரவணன், வீருக்காத்தான், மெர்லின் ஜெயந்தி, துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தொ.மு.ச. நிர்வாகி தர்மன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை நிதி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்