சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.;

Update: 2022-07-04 21:41 GMT

உயிரியல் பூங்கா

சேலம் அருகே உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை நேற்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து டேனிஷ்பேட்டை, சித்தர் கோவில் வனத்துறை நாற்று பண்ணையை பார்வையிட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சரை தலைவராக கொண்ட இந்த திட்டம் அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களையும் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

பசுமை திட்டம்

அதன்படி வனப்பரப்பை அதிகரிக்க 2022-2023-ம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் நாற்றுகள் நட்டு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் நாற்றங்கால் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ேசலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை மேம்படுத்தவும், அதன் வனப்பரப்பை 131 எக்டராக அதிகரிக்கவும் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யயப்பட்டு உள்ளது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பூங்காவை பார்வையிட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக 2020-2021-ம் ஆண்டில் 87 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்து உள்ளனர். 2021-2022-ம் ஆண்டு 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் வந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த பூங்காவிற்கு புதிய வன விலங்குகள் கொண்டு வரப்படும்.

வன விலங்குகள்

தற்போது பூங்காவில் 24 வகையிலான, 218 எண்ணிக்கையில் பல்வேறு வன விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக குள்ளநரி, புள்ளி மான்கள், குரங்குகள், தேவாங்கு, மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமைகள் போன்றவை இங்கு உள்ளன. புலி, சிறுத்தை, கரடி, நீர் பறவைகள் போன்ற இல்லாத இனங்கள் இந்த பூங்காவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 இடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், வனப்பரப்பை அதிகரிக்கவும், ஒரு எக்டர் பரப்பளவில் மரகத பூஞ்சோலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்