இளையான்குடியில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு
குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்து இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.;
இளையான்குடி, ஜூலை.11-
குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்து இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பேரூராட்சி மன்ற கூட்டம்
இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டு அனுமதியின்றி வைத்தால் உடனடியாக அகற்றப்படும் எனவும் அனுமதி பெற்று விழாவிற்கு முன்பாக 3 நாளும் பின்னர் 3 நாட்களும் குறிப்பிட்ட அளவு படி அனுமதிக்கப்படும். நீண்ட நாட்கள் வைக்கும் விளம்பர பலகை மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிதண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தீர்க்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாக தொடங்க இருக்கிறது.
பரமக்குடி வைகை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் கிணறுகள் அமைத்து மெய்யநேந்தல் கிராமத்தின் வழியாக இளையான்குடியை சென்றடையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிக்கும், பேரூராட்சி சார்பில் நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செயல் அலுவலர் கோபிநாத் நன்றி கூறினார்.