கூட்டணி பேச்சுவார்த்தை; தமிழகத்தில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது பா.ஜ.க
அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.க.வில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் , அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.க.வில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அனுமதியுடன் கட்சிகளுடன் ஆலோசிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய இணை மந்திரி எல்.முருகன் , தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மோகன், தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.