தற்கொலைகளும் நடப்பதாக குற்றச்சாட்டு:தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மீதான துன்புறுத்தலை தடுப்பது எப்படி?- மதுரை ஐகோர்ட்டு விரிவாக விசாரிக்கிறது

தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மீதான துன்புறுத்தலை தடுப்பது எப்படி? என்பது பற்றி மதுரை ஐகோர்ட்டு விரிவாக விசாரிக்க இருக்கிறது..;

Update: 2023-04-25 20:10 GMT


தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மீதான துன்புறுத்தலை தடுப்பது எப்படி? என்பது பற்றி மதுரை ஐகோர்ட்டு விரிவாக விசாரிக்க இருக்கிறது..

மாணவர்கள் மீதான துன்புறுத்தல்

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அரசின் கீழ் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இவை, கல்வி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டன. தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்துவிட்டன. விடுதியுடன் கூடிய தனியார் பள்ளிகளும் உள்ளன. இங்கு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற நோக்கத்தில் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. சில தனியார் பள்ளிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இதற்கு கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த சம்பவம் உதாரணம். தனியார் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

அதிகாரியை நியமியுங்கள்

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் 300 அல்லது அதற்கும் அதிகமான அளவில் மாணவர்கள் படிக்கும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு சார்பில் கல்வி அதிகாரியை நியமித்து பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவிட வேண்டும். மாணவிகள் தற்கொலைகளை தடுக்கும் வகையில், தனியார் பள்ளிகளின் மாணவியர் விடுதிகளில் இரவு நேரத்தில் ஒரு பெண் போலீசை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

விரிவாக விசாரிக்கிறது

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கின் விரிவான விசாரணைக்காக மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆஜராக அவகாசம் அளித்து, அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்