பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள்- ஓவியர்கள் சங்கத்தினர் ரத்த தானம்
உழைப்பாளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள்- ஓவியர்கள் சங்கத்தினர் ரத்த தானம் செய்தனர்.;
பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் 3-ம் ஆண்டு வண்ணத்திருவிழா மற்றும் உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பி.கிட்டு என்ற கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் அர்ஜூனா, பொருளாளர் காமராஜ், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் சார்பில் பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள், பிஸ்கெட், சோப்பு, பற்பசை, பிரஸ், ஷாம்பு ஆகியவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கியில் சங்கத்தை சேர்ந்த பெயிண்டர்கள், ஓவியர்கள் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், துணை செயலாளர் ரவிச்சந்திரன், வேப்பூர் ஒன்றிய மகளிர் அணி பொருளாளர் ரஹமத் நிஷா, செயற்குழு உறுப்பினர் ஆசியா பேஹம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.