வருமானவரி உள்ளிட்ட வரிகள் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆன்லைனில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு அறிவிப்பு

வருமானவரி உள்ளிட்ட வரிகள் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆன்லைனில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அறிவித்தது.;

Update:2023-10-20 03:00 IST


கொரோனா நோய்த்தொற்று பரவலின்போது, முக்கிய வழக்குகளை மட்டும் ஆன்லைன் மூலம் மனுவாக தாக்கல் செய்யும் நடைமுறை சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 2021-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மனுத்தாக்கல் செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக சென்னை ஐகோர்ட்டு ஆன்லைன் மனுத்தாக்கல் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் ஆன்லைன் குழு, தற்போது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆன்லைன் மனுத்தாக்கல் வசதியை(3.0) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தில் உள்ள வசதிகள் மற்றும் ஆன்லைன் மூலம் மனுத்தாக்கல் செய்வது குறித்த செயல்முறை வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் காகிதங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில வழக்குகளை கட்டாயம் ஆன்லைன் மூலம் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதைதொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் வருகிற 1-ந் தேதி முதல், வருமானவரித்துறை, வணிகவரித்துறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அனைத்து வரிகள் தொடர்பான வழக்குகளையும் கட்டாயம் ஆன்லைன் மூலம் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் http://www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்